Bharathi indru irunthaal
பாரதி இன்றிருந்தால்
கொடிய நோயொன்று
குழந்தையைக்கூட
கொன்று குவித்து
கொடுங்கோலாட்சி நடத்துவதைக் கண்ட
காலம் போற்றும் கவிஞன்_
காலா என் காலருகே வாடா -என - அச்சம் அறவே இன்றி
கர்வத்துடன் பாடி
மரண பயத்தில்
மூழ்கிக்கிடக்கும்-தன் நாட்டு
மக்களை மீட்டிடுவார்
மகிழ்ச்சி நிறைந்த கவியாலே
மரண பயத்தை
மறக்கச் செய்திடுவார்
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி -இன்று
பல தொழில் பெருகியும்
பார் முழுவதும்
பல மடங்காகிக் கிடக்கும்
பசிப் பிணியைப்
பார்த்துப்
பதைபதைத்து
பாட்டுக்கொரு கவிஞன்
பாரதி
பராசக்தியிடம் கேட்பார் இப்படி:
வல்லமை தாராயோ
வளர்ந்து வரும் பசிப்பிணியை
வேருடன் அழிக்க என்று பாடியிருப்பார்
காணி நிலம் வேண்டும்
கணிணிமயமாக்க அல்ல
கானக மயமாக்க ,
கனிகள் தந்து
கடும்பசியாற்றி
கொடி கட்டி பறக்கும் -பல
கொடிய நோய்களையும்
கொன்று விட்டு -நம்மைக்
காக்கும்
கானகம் வேண்டும் -அதற்குக்
காணி நிலம் வேண்டும்!
கைப்பேசி, கணிணி,
காணொலிக் காட்சி
கட்செவி,
கணக்கற்ற மின்னஞ்சல் என
வலைதளங்களின்
வலையில் சிக்கியிருக்கும் நம்மை
குறைந்த நேரமாவது
விட்டு விடுதலையாகி நிற்பாய் -அந்தச்
சிட்டுக் குருவியைப் போல என பாடி
சிந்திக்க வைப்பார்
இறுதியாய்
இன்னல்களால்
இன்பமற்று
இருக்கும் நம்மிடம்
மனதிலுறுதி வேண்டும் -என
மனதில் நம்பிக்கை விதைத்து
வீழ்வேன் என நினைத்தாயோ என
வீரமுழக்கமிட்டு
வழிகாட்டுவார்
விடியல் நோக்கிய நம்
வாழ்க்கை பயணத்திற்கு ...
-வி.ஆஷாபாரதி
Post a Comment