Header Ads

test

Illam kavithai

 இல்லம்



எண்ணற்ற இன்பங்கள்,

என்றாவது துன்பங்கள்,

வான வேடிக்கைகளுக்கும்,
வண்ணப் பூக்களுக்கும்,
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தோல்விதான் -இந்த
வீட்டின் மழலைகளுக்கு முன்.


ஏனையவை பொருந்திய ஓர் இல்லம்
என்றுமே அங்கு மகிழ்ச்சியின் வெள்ளம்!
படிக்கட்டுகள் பாடும்
எங்கள் மழலையர்களின்
கொலுசுச் சத்தம் -
பல மடங்காக்கும் -அதை
எண்ணி ரசிக்கும் எங்கள்
கரவொலிகளின் சப்தம்.
காற்றில் கானம் பாடும்
வேம்பு மரங்களின் இசைக்கச்சேரி நாளும்,
காற்றாடிகள் தேவையில்லை
கதவு சன்னல்களைச் சந்தித்துச் செல்லும் அந்த
காற்றின் இசையே போதும்.
அறைகளிலெல்லாம்
அன்றாடம் அனைவரின்
அன்பின் அலைகள்-இனி
அதற்கு ஏங்குமோ
அங்குள்ள கதவுச் சன்னல்கள்!



அழகாக்கும் வாயிலை
அத்தையின் கோலங்கள்
வழிப்போக்கர்களையெல்லாம்
வியக்க வைக்கும்
வண்ணக் கோலங்கள்.
விடுமுறை நாட்களெல்லாம்
விழாக்காலங்கள் தான் -வரும்
விடுமுறைக்கு ஏங்கும்
இந்த இல்லமும்
இன்பத்தால் நிறைந்திருக்கும்
எங்கள் உள்ளமும் .



காக்கைக் குருவிகளுக்குப்
படைத்திடுவோம் அன்றாடம் விருந்து -அதன்
கானங்கள் எங்கள்
செவிகளுக்கு விருந்து
மனதிற்கும் நல்ல மருந்து.

செடி கொடிகளும் கூட எங்களின்
செல்லப் பிள்ளைகள் -அதைச்
சினுங்காமல்
சிரித்து செழித்து வளரச்
செய்யும்
சிறு குழந்தையைப் பாதுகாக்கும்
செவிலியர் போல நாங்கள்.



இல்லத்தில் விளக்குகள் உண்டு -அவை
எழுபது வயதுக் குழந்தைகள் இரண்டு!
இல்லை இவர்கள்
இவ்வுலகில் இன்று -எனினும் எங்கள்
வாழ்வின்
இருளகற்றும் பணியில்
இன்றுவரை
வானத்து விண்மீன்களாய்!

தேடிப் பார்த்துத்
தோற்றேன் நானும்,
தரணியில் இல்லை
இது போல் ஓர் இல்லம்.
வேறு இடங்கள் சென்றாலும்
வேறென்ன வேண்டும்
வேர்களாய் நிற்கும் இதன்
வண்ண நினைவுகளே போதும்!

               -வி. ஆஷாபாரதி








9 comments: