Iyarkkai ennum peruvaram kavithai

இயற்கை என்னும் பெருவரம்
என்று பிறந்ததோ
எழில் கொஞ்சும் அந்த வானம்
எண்ணிலடங்கா இயற்கை என்னும் வரம்
என்னைச் சுற்றி நாளும்!
என்னே  படைத்தவனின் ஞானம்-என
எண்ணி வியக்கிறேன் நித்தம் நானும்.

கடிந்துரைத்ததாரோ கார்மேகம் உன்னை
கண்ணீர் விட்டும் களைந்து விடுகிறாயே
கோடி மக்கள் கண்ணீர் துடைத்து மழையாய்.

பனித்துளிகளைப் பருகியும் பசியாறாமல்
பயணிக்க புறப்படும் -அந்தப்
பகலவன் காலையில்,
பகிரும் பேரொளியை
பாகுபாடின்றி  -தான்
பாராத நிலவிற்கும்.

பார்த்ததில்லை உன் போல் பேரன்பு
பாரில் இல்லை -அதற்கு மிஞ்சிய பண்பு.

மனதிற்கு மருத்துவமளிக்கும் மலைச் சிகரங்கள்,
கவலைகளைக் கடத்திச் செல்லும்
காற்றுடன் பயணித்து கடவுச் சீட்டின்றி
கண்டம் தாண்டும் குருவிகள்.

இப்படி
நெகிழ வைத்த இயற்கை அன்னை
நெகிழியால் நிரப்புவதா உன்னை!
வரம் தந்த உன்னை வளர்ச்சிக்கு என
வரையறையின்றி  சிதைப்பதை
வாடிக்கையாக்கி
வர(ள)ங்களை விற்று
விலை நாணயங்களாக்கும் -மதியை
விற்றுவிட்ட மாந்தர்க்கு
விதைக்கப்படும் இன்று
விடியலின் விதை -முற்றுப்புள்ளி
வைக்கப்படும் உன் மீதான வதை.
                   -வி ஆஷாபாரதி





2 comments: